Recent Posts

”அன்னுரில் ஒருபிடி மண்ணை எடுத்தாலும் சாகும்வரை உண்ணாவிரதம்” - அண்ணாமலை ஆவேச பேச்சு!

”அன்னுரில் ஒருபிடி மண்ணை எடுத்தாலும் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்வேன்” என கோவை கண்டன போராட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

கோவை புறநகர் பகுதியான அன்னூரில் சிட்கோ தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது. இதனை திரும்பப்பெற வலியுறுத்தி அன்னூர் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூர் சந்திப்பில் ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த போராட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

image

"திமுக எப்போதும் பின்னாடி கேட்டில் வந்து தான் பழக்கம். நிறுத்தி வைத்திருந்த அரசாணையை மக்கள் சோர்வடைந்திருந்த போது கையெழுத்து இட்டுள்ளனர். விவசாயிகளை புரிந்துகொண்ட கடைசி தலைவர் கர்ம வீரர் காமராஜர். அன்னுர் மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பவில்லை. காலம் காலமாக விவசாய மண்ணில் வாழ்ந்து வருபவர்கள். அரசாங்க குறிப்பில் 48,195 ஏக்கர் தொழிற்சாலைகள் அமைக்க காத்திருப்பில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரியில் திமுக நிலம் எடுத்தனர். ஆனால் இப்போது ஒரு நிறுவனம்கூட அங்கு இல்லை. கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலம் உள்ளது.

image

அன்னூரில் நீர் வளம் இருப்பதால் இங்கு தொழிற்பேட்டை கொண்டு வர பார்க்கின்றனர். தொழிற்பேட்டை வந்தால் அமைச்சர்களுக்கே லாபம். சிப்காட் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். விவசாயிகளுக்கு நல்லது செய்ய முதல்வர் நினைத்தால் மயிலாடுதுறையில் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்திக்க வேண்டும். பெண்கள் இங்கு வேதனையில் உள்ளனர்.

image

கேரள அரசு தேனி மாவட்டத்திற்குள் சர்வே செய்கின்றனர். "என்னுடைய பூமி" என்ற பெயரில் 80 ஏக்கரை எடுத்துவிட்டனர். இந்தியா முழுவதும் தமிழர்கள் பிரதமர் மோடி பக்கம் சென்றுகொண்டுள்ளனர். அன்னுரில் ஒரு பிடி மண்ணை எடுத்தாலும் உயிர் இருக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்வேன். தைரியம் இருந்தால் ஒரு பிடி மண்ணை எடுத்து பாருங்கள். அரசாணையை எடுங்கள் என கெஞ்ச மாட்டோம். திமுக அரசுக்கு ஈகோ அதிகம். திமுக கூட்டணி கட்சிகளை போல நாங்கள் அடிமை இல்லை.

image

காலவரையற்ற உண்ணா விரதம் இருப்பேன். எவ்வளவு முறை வேண்டுமானலும் சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள். சிறை சென்றுவிட்டு வந்து மிசா சென்று வந்தவன் என கூறிக்கொள்ள மாட்டோம். 1 லட்சம் கோடிக்கும் மேல் பணம் வைத்துள்ள கட்சியை 4 MLA க்களையும், தொண்டர்களையும் மட்டுமே வைத்து எதிர்க்கிறோம். மிகப்பெரிய காண்டா மிருகத்தை எதிர்த்து இருக்கிறோம். துணிவோடு இருங்கள்” என்று ஆவேசமாக பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/152091/Annamalai-talks-about-DMK-and-SIPCOT-at-Annur-protest.html

கருத்துரையிடுக

0 கருத்துகள்