1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் தருவதாகக் கூறிய தனியார் நிதி நிறுவனம் மீதான மோசடி புகார் எதிரொலியால் வேலூரில் உள்ள வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
இண்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் 8 ஆயிரம் ரூபாய் தருவதாகக்கூறி, பலரிடம் முதலீட்டை பெற்று மோசடி செய்து வந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 21 இடங்களில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களின் வீடுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் மின்மினி சரவணன் என்பவரது வீடும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தை நடத்தி வந்த வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால், லட்சுமி நாராயணன் வீடு பூட்டப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் தலைமறைவான நிலையில், நாள் முழுக்க காத்திருந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த வீட்டை பூட்டி சீல்வைத்ததோடு இரண்டு கார்களுக்கும் சீல் வைத்துவிட்டுச் சென்றனர்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1 கோடி ரொக்கப் பணம், தங்க நகைகள், லேப்டாப், மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/144791/Vellore-Extortion-of-money-by-paying-high-interest-houses-of-directors-of-financial-institutions-are-sealed.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post