போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011 - 2015 வரையிலான காலக்கட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று நிலையில் நாற்பத்தி ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது
இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று நால்வர் மீதான வழக்கையும் ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்பானது இன்று வழங்கப்பட்டது. அதில் சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்றவழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என்றும் இதன் காரணமாக செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாகவும், இது தொடர்பான வழக்கு மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/146843/Supreme-Court-verdict-on-Senthil-Balaji-case.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post