திருமயம் அருகே `வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்’ என்ற விளம்பரத்தை நம்பி 8.47 லட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், அதனால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி சீதாலெட்சுமி (27). இல்லத்தரசியான இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருவாய் ஈட்டலாம் என ஆன்லைன் விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்து அதில் வந்த லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் கேள்விகளை பூர்த்தி செய்து இறுதியாக இவரது கே.புதுப்பட்டி இந்தியன் வங்கியில் உள்ள அவரது கணக்கு தொடர்பான விவரங்களையும் அதில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து முதற்கட்டமாக 100 ரூபாயை முதலீடு செய்து 160 ரூபாய் வருவாய் பெற்றுள்ளார். அதன் பிறகு 500 ரூபாயை முதலீடு செய்து 2000 ரூபாய் வருவாய் பெற்றுள்ளார். இதை நம்பிய அவர், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரூ.8,47,018 ரூபாயை செலுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சீதாலட்சுமிக்கு எந்த ஒரு தொகையும் திரும்பி வராததால் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் தற்போது புகார் கொடுத்திருக்கிறார்.
முதற்கட்ட விசாரணையில் சீதாலெட்சுமியின் வாட்ஸ் அப்புக்கு தகவல் அனுப்பிய எண்ணை சோதனை செய்தபோது அது கேரளா மாநிலத்தில் செயல்படுவது தெரியவந்தது. மேலும் சீதாலெட்சுமியை யார் ஏமாற்றியது என்பது இதுவரை தெரியாத நிலையில், இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்பி தொகை விவகாரத்தில் செயல்படுவதை தவிர்க்குமாறு சைபர் எக்ஸ்பெர்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148993/Woman-loses-Rs-8-47-lakh-because-of-online-advertisement-of-Earn-from-home.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post