அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கில், திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வார காலத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திருச்சியில் அவர் கையெழுத்திடச் சென்றபோது 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டதாகவும், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கண்டித்து கோஷம் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ,பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், நோய்த்தொற்று பரப்பும் விதத்தில் ஊறு விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியன் ஆஜராகி அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு தொடர்பாக திருச்சி கண்டோண்மண்ட் காவல்துறை பதிலளிக்கவும், உதவி ஆய்வாளரை வழக்கில் சேர்க்கவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதுவரை, ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக் கூடாது எனவும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/149392/Ex-minister-Jayakumar-case-Court-orders-new-police.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post