தற்போது இருப்பதைப்போல் அப்போது செல்போன், வீடியோ கேமராக்கள், சமூக வலைதளங்கள் இருந்திருந்தால் நாங்கள் செய்த தொண்டிற்கு நான் அப்போதே முதலமைச்சராகி இருப்பேன் என நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் நடந்த அக்கட்சியின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சென்னை திருவொற்றியூரில் அக்கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகளுக்கும் நலிந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசுகள் புத்தாடைகள் இனிப்புகளை சரத்குமார் வழங்கினார். அப்போது பேசிய அவர், ’’சமத்துவ மக்கள் கட்சியினர் அரசியல் மட்டுமல்லாது ஆன்மிகம் சமத்துவம் என அனைத்தும் பேசக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். தொண்டர்கள் மக்களுக்காக உழைத்தால் தலைவன் முதல்வராகவும் பிரதமராகவும் ஆகலாம். எந்த ஒரு பணபலமும் இல்லாமல் பொருளுதவியும் இல்லாமல்15 ஆண்டுகள் இந்த இயக்கம் இயங்கி வருவதே பெரிய சாதனை தான். அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்ல; சேவை செய்வதற்கும்தான்.
நாங்கள் தொண்டு, சேவை உதவி செய்து கொண்டிருந்த காலங்களில் செல்போன், வீடியோ கேமரா போன்றவை இருந்திருந்தால் அன்றைக்கு நாங்கள் தான் சி.எம். எல்லோர் கையையும் கீறினால் சிகப்பு நிறத்தில் தான் ரத்தம் வரும். அது தான் சமத்துவம். ஜாதி குறிப்பிட வேண்டிய இடத்தில் எனது தந்தை மனித ஜாதி என குறிப்பிட்டதாலேயே எனக்கு பல கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டது. அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பதைவிட அடுத்த தலைமுறையை பற்றி சந்திப்பவன் தான் தலைவன். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைக்கும் என அறிவித்தவன் நான்’’ என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாள்களிடம் பேசிய அவர், தீபாவளியை மக்களோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த விழாவிற்கு தாம் வந்ததாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கையை முழுவதுமாக படிக்கவில்லை என்றும், ஆங்கிலத்தில் இருப்பதால் முழுவதுமாக படித்துவிட்டு இரண்டு மூன்று நாட்களில் தாம் அறிக்கை வெளியிடுவதாகவும், அதுவரை அதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை எனவும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/149451/Sarathkumar-speech-at-Diwali-celebration-event.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post