வெள்ளி, 10 மார்ச், 2023

”தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” - பாஜக அலுவலகத் திறப்பு விழாவில் ஜெ.பி.நட்டா பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாரதி ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பாரதிய ஜனதா கட்சி
அலுவலகங்கள் காணொலி காட்சி மூலமாக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதேபோல் தர்மபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள அலுவலகங்களையும் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். கிருஷணகிரி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து, பின்னர் பாஜக கொடியினையும் ஏற்றி வைத்தார்.

விழாவில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:-

இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். ஒரே நாளில் 10 பாரதிய ஜனதா அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த 10 அலுவலகங்கள் திறப்பு விழாவிற்காக வந்த நான் ஓசூர் சந்திர சூடேஸ்வரரையும், கிருஷ்ணகிரி பத்மாவதி பீடத்தையும் வணங்கி உங்கள் முன்பு எனது உரையை தொடங்குகிறேன். 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பதவி ஏற்றார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அந்த நேரம் அமித்ஷா தலைவராக இருந்தார். நான் பொதுச் செயலாளராக இருந்தேன். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சி கூட்டங்கள் நடத்திட, மாவட்டத்திற்கு ஒன்று வீதம் ஒரு கட்சி அலுவலகம் சொந்தமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

அதன்படி 887 மாவட்டங்களில் 290 மாவட்டத்தில் பாஜக அலுவலகம் நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 150 இடங்களில் கட்டுமான
பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகங்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். இன்றைய தினம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி உள்பட 10 மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தில் நூலகம், தலைவர் அமர அறை, கூட்ட அறை என அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. அலுவலகம் என்றால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும்.
ஆனால் நமது அலுவலகங்கள் அப்படி அல்ல. அது ஒரு கோவில். 24 மணி நேரமும் தொண்டர்களுக்காக திறந்து இருக்கும். தொண்டர்கள் இங்கு வரலாம்.
கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கட்டிடங்கள் இப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களிடையே நமது ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளை
எடுத்து கூறும் இடமாக இருக்க வேண்டும்.

image

இந்த கட்சி அலுவலகங்கள் நம்மை ஒருமைப்படுத்தவும், மேன்மைப்படுத்தவும் கூடிய இடமாக இருக்க வேண்டும். வட மாநிலங்களில் தேர்தல் முடிந்து
முடிவுகள் வந்து விட்டன. திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேகலாயாவில் கூட்டணி ஆட்சி
அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மோடியின் அனைவரையும் உள்ளடாக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டதே ஆகும்.
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே சண்டை நடக்கிறது. திரிபுராவில் இரு கட்சிகளும் தோழமையுடன் போட்டியிடுகின்றனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் பாரதிய ஜனதா தொண்டர்களின் கடின உழைப்பால், தாமரை மலர்ந்தே தீரும். 1951, 52-ல் எந்த நோக்கத்திற்காக பாரதிய ஜனதா தொடங்கப்பட்டதோ, அது 2019ல் நிறைவேறி உள்ளது. அது, அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்தது. இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக திகழ்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் நம் நாடு 10வது இடத்தில் இருந்தது. தற்போது மோடியின் வளர்ச்சி திட்டங்களால், 5வது இடத்தை பிடித்துள்ளது. 200 ஆண்டுகளாக 5வது இடத்தில் இருந்த பிரிட்டன், தற்போது 6வது இடத்தில் உள்ளது. இதே போல், டிஜிட்டல் பரிவார்தனையில் 40 சதவீதம் இந்தியா பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக 9 ஆண்டுகளுக்கு முன்பு 92 சதவீதம் செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் பயன்படுத்தி வந்தோம். தற்போது 97 சதவீதம் செல்போன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக ஆப்பிள் நிறுவன செல்போன்கள் மேக் இன் இந்தியாவாக உள்ளது.

இதே போல் மருத்துவத்துறையிலும் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இங்கிருந்து தரமான மருந்துகள்
200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆட்டோமொபலை தயாரிப்புகள் ஜப்பான் நாட்டை மட்டுமே சார்ந்து இருந்த காலம் மாறி, தற்போது இந்தியா முன்னேறி உள்ளது. தமிழ் மொழி, கலாசாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். சித்தா மருத்துவத்திற்கு உரிய தேசிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்று தர வேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே மோடி பேச தொடங்குகிறார். தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.31,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான்
உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது.
நான் ஏற்கனவே கூறியது போல், தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான். நான் கூறியது போல் தற்போது தி.மு.க. குடும்ப
அரசியல் என்பதற்கு, முதல் அமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரியவில்லை.

வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது. மக்கள் அரசியலால் பாரதிய ஜனதா வளர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பாஜக. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பாஜக தான்” இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேச தொடங்கிய போது வெற்றி, வெற்றி, வெற்றி வேல். வீர, வீர, வீர வேல் என்று முதலில் தமிழில்
பேசினார். இதன் பிறகு அவர் உரையை தொடங்கினார். ஆங்கிலத்தில் அவர் பேச, மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன் தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/156690/JP-Natta-s-speech-at-the-inauguration-of-the-BJP-office.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...