சனி, 11 மார்ச், 2023

”திடீர் திடீர்னு வர்ராங்க; நாங்கதான் அடுத்த ஆட்சினு சொல்றாங்க” - கோவையில் முதல்வர் பேச்சு!

”நாடும் நமதே, நாளையும் நமதே. நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெறும் முயற்சியில் முழுமையாக இறங்க உள்ளோம் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

கோவையில் மாற்றுக் கட்சியினர் சுமார் 10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் கல்பனா, முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, எம்பி சண்முக சுந்தரம், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, கோவை செல்வராஜ், பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சருக்கு நிகழ்ச்சி நடைபெறும் விழா அரங்கு வரை கட்சி சார்பில் மேள தாளங்கள், முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தலைமையில் பலர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதில், அதிமுக, தேமுதிக, அமுமுக, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த விழாவில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

image

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது... 'நமது இலக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 40 க்கு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி வாகைசூட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒட்டு மொத்த இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார்' என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார் அப்போது... 'ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சியில் இருந்து விலகியவர்கள் தாய் கழகத்தில் இணைந்துள்ளனர். விவாத நிகழ்ச்சியில் பேசும் அதிமுகவினர் பேச்சை கேட்டால் எனக்கு கோபம், ஆத்திரம் வரும். ஆனால் செல்வராஜ் பேசுவதை பார்க்கும் போது கோபம் ஆத்திரம் வராது. அவர் உள் ஒன்று வைத்து, வெளியே ஒன்று பேசமாட்டார். சில சமயங்களில் அவர் திட்டியுள்ளார். திட்ட திட்டத்தான் நாம் வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறோம்.

கிளுகிளுப்பைகாரன் போல ஏமாற்றி அழைத்துச் சென்றவர்கள், தாயைத் தேடி வந்திருப்பது போல தாய் கழகத்தை தேடி வந்திருக்கின்றனர். தாய் கழகத்திற்கு வந்திருக்கும் உங்களை தாய் உள்ளத்தோடு வரவேற்கிறேன். திமுகவை பொருத்தவரை தாய் கழகம் என சொல்கிறோம். இந்த கழகத்திற்கு என ஒரு வரலாறு உள்ளது. 1949-ல் அண்ணா கட்சியை துவங்கிய போது ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என ஆரம்பிக்கவில்லை. திடீர் திடீர் என கட்சிகள் தோன்றுவதற்கு முன்பே நான் தான் அடுத்த ஆட்சி, அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். அப்படி தோன்றிய கட்சிகள் அநாதைகளாக அலைந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம்.

image

ஆனால் திமுக அப்படியல்ல. 1949-ல் துவங்கிய கட்சி, 1957-ல் தான் தேர்தலில் போட்டியிட்டது. 1967-ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் காட்டினார். அண்ணா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்கள் தான், தன்மானத்தோடு தமிழ்நாட்டில் வாழ காரணம். கலைஞர் 5 முறை முதலமைச்சராக இருந்தார். 1975-ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி தனக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து காத்துக் கொள்ள, நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். நெருக்கடி நிலையை எதிர்க்கக் கூடாது என வந்த தூதுக் குழுவிடம் ஆட்சி இல்லை, உயிர் போனாலும் கவலைப்படமாட்டேன், ஜனநாயகம் தான் முக்கியம் என்றார்.

அடுத்த நாள் மாநாட்டிற்கு பிறகு, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டோம். 500-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் வாடினோம். அப்போதும் கருணாநிதி ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களைப் பற்றி தான் கவலைப்பட்டார். பிறகு 1991-ல் விடுதலை புலிகளுக்கு துணையாக இருப்பதாக பழியை போட்டு ஆட்சியை கவிழ்த்தார்கள். இந்த நாட்டில் திமுகவை போல வெற்றி பெற்ற கட்சி எதுவும் இல்லை. தோற்ற கட்சியும் எதுவும் கிடையாது. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாத இயக்கம் திமுக. மக்கள் அன்பை, ஆதரவை பெற்று, 6-வது முறையாக எனது தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.

image

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் போன்ற சொன்ன திட்டங்களை மட்டுமல்ல, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமை பெண் திட்டம் போன்ற சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே நடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு, ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை தான் காரணம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.

திட்டங்கள் தொடர, சாதனைகள் மலர, ஆட்சி பீடுநடை போட நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு இன்றே களமிறங்கி வியூகங்கள் அமைத்து பணியாற்ற வேண்டும். மதம், சாதியை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் நாடாளுமன்றத் தேர்தல் பணியாற்ற வேண்டும். 40 க்கு 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். மதச்சார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும் முயற்சியில் முழுமையாக ஈடுபட போகிறோம். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். துணை நிற்க வேண்டும்' என பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/156730/Everyone-should-strive-for-victory-in-the-parliamentary-elections-Chief-Minister.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...