Translate

இந்த வலைப்பதிவில் தேடு

கட்டப்பட்ட 14 ஆண்டுகளில் இடிந்துவிழுந்த மருத்துவமனை மேற்கூரை - அச்சத்தில் நோயாளிகள்

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை உள்ள பிரசவ வார்டு கட்டட மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க வந்த பெண்ணின் தாயார் காயமடைந்தார்.

வேதாரண்யத்தில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு சிகிச்சைபெற்று செல்கின்றனர். தாலுகாவில் பிரசவம் பார்க்கும் அளவிற்கு உள்ள ஒரே அரசு மருத்துவமனை என்பதால் இந்த மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தினசரி பிரசவம் மற்றும் பரிசோதனைக்காக வருகின்றனர்.

image

மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது புதிதாக கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில் பிரசவம் பார்க்கும் வார்டும் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் வார்டும் செயல்பட்டு வருகிறது. இந்த வார்டின் வாராண்டாவில் பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு துணையாக வரும் உறவினர் தங்கி வருகின்றனர்.

image

இந்த நிலையில் இரவு பிரசவம் பார்க்க வந்த பெண்களுக்கு துணையாக வந்த வெளியூரைச் சேர்ந்த பெண்கள் வார்டின் முன்புறமுள்ள வரண்டாவில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கட்டடத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் அங்கு அமர்ந்திருந்த பெண்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடினர். இதில் அங்கு அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த தென்னடார் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் கையில் காயமடைந்து ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது.

image

இக்கட்டடம் கட்டப்பட்டு 14 ஆண்டுகளிலேயே இவ்வாறு உடைந்து விழுந்த சம்பவம் நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பிரசவ வார்டை வேறு கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/143315/Hospital-roof-collapsed-within-14-years-after-it-was-built-at-Vedaranyam.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post