கூடலூர் அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்விற்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினிவயல் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவரது 21 வயது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரியா கர்ப்பமடைந்து ஏழு மாதம் ஆகியிருக்கிறது. அவருக்கு கடந்த 18 ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது பிரியா ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரியாவை பெற்றோர்கள் அழைத்துச்சென்ற நிலையில், வயிற்று வலி அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக ஊட்டி கொண்டுசெல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மருத்துவர்கள் அறிவுறுத்தியதுபோல ஊட்டி அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் பெற்றோர்கள் பிரியாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்று இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருப்பவர்கள் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். பிரியாவிற்கு குழந்தை பிறந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பிரியாவின் தந்தை தேவன் யாருக்கும் சொல்லாமல் குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து இருக்கிறார். ரத்தப்போக்கு காரணமாக பிரியா உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத காரணத்தால் அவரும் உயிரிழந்து இருக்கிறார்.
இந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் உடல் நேற்று இரவு வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. உடற்கூராய்விற்கு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. குழந்தையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை கிடைத்த பிறகு குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா அல்லது இறந்த பிறகு புதைக்கப்பட்டதா என்பது தெரியவரும்.
அதேபோல உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகு, அதன் அடிப்படையிலேயே அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உயிரிழந்த பிரியாவின் உடற்கூராய்விற்கு பிறகு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரை இரு மரணங்களும் இயற்கைக்கு மாறாக நடந்திருப்பதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/145722/Police-investigate-on-the-death-of-new-born-baby-at-Ooty.html
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post