இளம் பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இளைஞர், உண்மையிலேயே ஏரியல் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நாடகம் ஆடினாரா என அவரது நண்பர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவருடைய உடல் ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த் (29), இவர், தன் பள்ளி தோழியுடன் காதலில் இருந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணிடம் இருந்து ரூ.68 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார் நிஷாந்த். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நிஷாந்த்-க்கும் தொழிலதிபரின் மகள் ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இது குறித்து நிஷாந்தின் காதலி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபரின் மகளுடன் நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இதையடுத்து நிசாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அவர் தலைமறைவானதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக நிஷாந்த் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது நண்பர் ஒருவரின் காரை எடுத்து சென்று, போரூர் மேம்பாலத்தின் மீது நிறுத்தி விட்டு போரூர் ஏரியில் குதித்து விட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் இணைந்து கடந்த இரண்டு தினங்களாக நிஷாந்தின் சடலத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஏரியில் நிஷாந்தின் சடலம்; கிடைக்காததால் நேற்று தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினார்கள். இந்த நிலையில் மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்த இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஒரு செல்போன் நிஷாந்தின் நண்பரின் செல்போன் என்பதும், நிஷாந்தின் செல்போன் முழுவதுமாக சிம் கார்டு இல்லாமல் சேதமடைந்திருப்பதும், அதனால் அவர் நண்பரின் செல்போனை எடுத்து வந்து அந்த செல்போனில் இருந்துதான் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
நிஷாந்தின் செல்போனும் கிடைக்காததால், உண்மையாகவே அவர் ஏரியில் குதித்தாரா அல்லது வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஏரியில் குதித்ததுபோல தற்கொலை நாடகம் ஆடினாரா என்ற கோணத்தில் போரூர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நிஷாந்தின் பெற்றோர் இது சம்பந்தமாக எந்த புகாரும் அளிக்காத நிலையில், அவரது பெற்றோரிடமும், நிஷாந்தின் நண்பர்களிடமும் போரூர் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
இதற்கிடையே இன்று காலை போரூர் ஏரியில் உடல் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மிதந்து கிடந்த உடலை கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில் அது நிஷாந்தின் உடல் என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்."
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/156564/Youngster-Dead-body-recovered-after-3-days-from-Porur-lake.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post